உடல் எரிக்கப்பட்டு எலும்பும் சாம்பலும் வைக்கப்பட்டிருந்த ஏழு பண்டைய தாழிகள் புதுச்சேரி அரிக்கமேடு கிராமத்துக்கு அருகே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரிக்கமேடு தொல்பொருள் ஆய்வு களத்திற்கு அருகில் மணவெளி என்ற இடத்தில் தனியார் ஒருவரின் நிலத்தில் கட்டடம் கட்ட அடித்தளம் தோண்டியபோது இவை கண்டெடுக்கப்பட்டன.
இவை கி.மு. 3 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தாகூர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகிறார். 1989 ஆம் ஆண்டு அரிக்கமேடு பகுதியில் தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி நடத்திய டாக்டர் விமலா பேக்லியின் தலைமையிலான குழுவில் ரவிச்சந்திரன் ஓர் உறுப்பினராக இருந்தவர்.

அரியாங்குப்பம் ஆற்று முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள அரிக்கமேடு முன்பு ஒரு துறைமுகமாக இருந்தது என்று கருதப்படுகிறது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் கடல் வணிகத் தொடர்புகளைக் கொண்டதாக அரிக்கமேடு துறைமுகம் இருந்துள்ளது. கி.மு. 300லிருந்து கி.பி. 1800 வரை கலாச்சாரத் தொடர்ச்சி கொண்டிருந்த ஒரே புதைபொருள் ஆய்வுக் களம் தென்னிந்தியாவிலேயே அரிக்கமேடு ஒன்றுதான்.
இந்த முன்னாள் துறைமுகத்தில் வணிகம் செழித்து இருந்தபோது அங்கு வசித்த மக்கள் பயன்படுத்தியவை இந்த அஸ்தி கலசங்கள். சமஅடக்கம் என்பது பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. சவத்தை முதலில் எரித்துவிட்டு, பின்னர் அதன் சாம்பல், எலும்புகளை கலசத்தில் வைத்து மறுபடியும் ஒரு முறை புதைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்று ரவிச்சந்திரன் கூறினார்.
இதற்கு அருகில் உள்ள சுத்துக்கேணி, பூர்ணாங்குப்பம், பெரம்பை போன்ற இடங்களில் இத்தகைய அஸ்திக் கலசங்கள் இதற்கு முன் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. 1950 ஆம் ஆண்டில் சுத்துக்கேணியில் ஒரு அரிய புதைபொருள் ஆய்வு கண்டெடுக்கப்பட்டது. தங்க வளையல்கள், காதணிகள், தாமரைப் பதக்கம் வைத்த சங்கிலி, பல்வேறுபட்ட உருவமும் வடிவமும் கொண்ட தங்க மணிகள் கொண்ட செப்புப் பெட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு மண்பானை கண்டெடுக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த புதைபொருள் கண்டுபிடிப்பு இதுவாகவே இருந்து வருகிறது.
source : viduthalai.periyar.org.in