கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 23

  1. பகன்றை
பகன்றை

மருத நிலத்திற்குரிய இக்கொடியைச் ‘சிவதை’ என்று நச்சினார்க்கினியரும்,.  பெருங்கையால் என்று அடியார்க்குநல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 155-160 உரை) கூறுவர்.  இக்கொடி அகன்ற இலைகளைக் கொண்டது.

தேன் மிகுதியாக உடைய, பனிக்காலத்தில் மலரும் பகன்றை மலர் வெண்மையான இதழ்களையும், பகலில் தோன்றும் திங்கள் போலும் உருவத்தினையும் கொண்டது. இதன் மணம் கள்ளின் மணம் போன்றிருத்தலால், இதனை இல்லத்தார் விரும்பிச் சூடுவதில்லை; முறுக்கிய ஆடையை ஒத்து விளங்கும். பகன்றை மலர் வயலிலும், சேற்றிலும், பசுமையான புதரிலும் மலரும் என இலக்கியங்கள் கூறுகின்றன (ஐங்குறுநூறு, 456 : 1-2, குறுந்தொகை, 330, மதுரைக்காஞ்சி, வரி 261 மற்றும் அகநானூறு, 176 : 10).  ஞாயிறு மறையும் மாலைக்காலத்தில் விரிந்து மலரும் என்பதை, “இறங்குபோது அவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றை” என்று அகநானூறு (243 : 3) காட்டுகிறது. பகன்றைப் பூவாலாகிய மாலையைச் சலவை செய்த ஆடையைப் போல மக்கள் அணிவதைப்  பதிற்றுப்பத்து (76 : 12-13) சுட்டுகின்றது.

பகன்றைமலர் பால் நிரம்ப ஊற்றப்பெற்ற கிண்ணம் தோற்றமளிப்பதை,

“பகன்றை வால் மலர் பனி நிறைந்ததுபோல்

பால்பெய் வள்ளம்”

என்ற அகப்பாடல் (219 : 4-5) கூறுகிறது.

அரும்பு மலர்ந்த பகன்றையின் புதுப்பூ போன்ற அகல மடிக்கப்பட்ட ஆடையை,

“போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,

அகன்றுமடி கலிங்கம்”

என்று புறப்பாடல் (393 : 17-18) புலப்படுத்துகின்றது.

இதனையும், பாகல் கொடியையும் அறுத்துச் சேர்த்து அவற்றால் காஞ்சி மரத்திடத்து பசுவைக் கட்டி வைத்ததை அகப்பாடல்446 கூறுகிறது.

கள் விற்கும் பெண்டிர் பகன்றைப் பூமாலையைத் தலையில் சூடுவதை, “பகன்றைக் கண்ணி பழையர் மகளிர்” என்று மலைபடுகடாம் (வரி 459) சுட்டுகின்றது. முன்பனிக் காலத்தில் வேல்போல விரிந்த மேல் கதுப்பாகிய தோலை உடைய பகன்றை வெள்ளி வட்டிலைப் போல மலர்வதை நற்றிணைப் பாடல்  (86 : 2-3) காட்டுகின்றது.

இப்பாடல்கள் பகன்றையின் வடிவ அமைப்பினையும், அது மலரும் காலத்தினையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்பாடல் வரிகள் சங்கப் புலவர்களின் நுணுகிய நோக்கினைப் புலப்படுத்துகின்றன.

  1. பலாசம்

பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

“செம்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம்”

“சேபாலிகையுஞ் செங்கோடு வேரியும்

தீவாய்த் தோன்றியுந் திலகமும் திரிகோற்  

பகன்றையும் பாலாசும் அகன்றலைப் புழகும்”

பலாச மலர்

என்று திருவிளையாடற் புராணமும் (திருவாலவாய்க் காண்டம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், 2444 : 12), பெருங்கதையும் (இலாவண காண்டம், 12. மாசன மகிழ்ந்தது : 25-27) இம்மலரைக் குறிப்பிடுகின்றன.

  1. பிண்டி

பிண்டி அசோக மரத்தில் மலரும் மலராகும். இது செயலை என்ற பெயராலும் குறிக்கப் பெற்றுள்ளது.

பிண்டி மலர்க்கொத்து

செந்நிறமாக இருக்கும். மணம் உடைய, வண்டுகள் மொய்க்கும் இம்மலர், ‘பல்பூம் பிண்டி’ என்றும், ‘சுனை சூழ் சினையெலாம் செயலை மலர’ (குறிஞ்சிப்பாட்டு, வரி 88, பரிபாடல், 15 : 30-31) என்றும், ‘கடிமலர்ப் பிண்டி’ என்று பரிபாடலும் (12 : 88) சுட்டுகின்றன.

உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த மலர்களின் மேலே வண்டுகள் ஏறி (மலர்களை நெருப்பென்று மயங்கி) ஒதுங்கித் திரியும் (சில நேரங்களில் அம்மயக்கம் நீங்கி மலர்களே என்று துணிந்து மது உண்ணச் செல்லும்). மாமரங்களின் மேலே உள்ள குயில்கள் இதைக் கண்டு (அந்தோ, இவ்வண்டுகள் நெருப்பினில் அகப்பட்டனவே என்று) கூவும் கொடித் தோட்டங்கள் உள்ள திருவெள்ளறைத் தலம் என்பதை,

“ஓங்கு பிண்டியின் செம்மலரேறி வண்டுழிதர மாவேறித்

தீங்குயில் மிழற்றும்”

என்று பெரிய திருமொழி (5-3-9) அழகாக கற்பனை நயம் படக் கூறியுள்ளது.

சூரர மகளிர் தம் காதுகளில் அசோக மரத்தின் தளிர்களைக் குழைகளாக அணிந்திருந்ததை, “வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்” என்று திருமுருகாற்றுப்படை (வரி 31) காட்டுகின்றது. மேலும், கன்னிப் பெண்கள் நீராடும்போது கொழுந்தாக தளிர்த்த அசோகினது தளிரைத் தம் செவிகளில் செருகிக் கொண்டதை, “சாய்குழை பிண்டித் தளிர்காதில் தையினாள்” என்று  பரிபாடல் (11 : 95) சுட்டுகின்றது. கொம்புகளால் தம்முள் பிணைந்து விளங்கும் அசோகின் சுரும்புகள் ஒலிக்கும் செந்தீப் போன்ற ஒள்ளிய பூக்கள் மிளிர்கின்ற சோலையைக் காட்டுகின்றது மதுரைக்காஞ்சி (700 – 701).

  1. வஞ்சி
வஞ்சி மலர்

புறமதிலுக்கு வெளியே வஞ்சி மரம் இருந்ததால் வஞ்சி மாநகரம் ‘வஞ்சி’ எனப் பெயர்பெற்றது. வஞ்சி மரத்துக்கும், வஞ்சி மாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சி மாநகரம், ‘பூவா வஞ்சி’ எனப் போற்றப்பட்டது. வஞ்சி பகைமேற் செல்வோர்க்குரிய அடையாள மாலை.

‘வஞ்சி’ என்ற தாவரப் பெயர் தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது  ‘வஞ்சிதானே முல்லையது புறனே’ என இத்தாவரப் பெயர் பயின்று வருகிறது. இச்சொல் சங்க இலக்கியத்தில் அடிக்கடி காணப்படுகிறது. “வஞ்சிக்கோட்டு உறங்கு நாரை” எனக் கூறப்பட்டிருப்பதால் இது ஒரு மரமாக இருக்கவேண்டும். “பகைவர் மேற்சேரலும், புதலும், மங்கையும், பாவிலோர் பாவும், ஓர் பதிப் பெயரும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும்” என்று பிங்கல நிகண்டு (4015) கூறுவதால், இது ஒரு புதர்ச் செடியாக இருக்கவேண்டும் என்றும், ஒரு கொடியாக (‘வஞ்சிக்கொடி’ என்ற பயன்பாடு பரவலாக இருந்ததாலும், மங்கையோடு இப்பெயர் தொடர்புபடுத்தப்படுவதாலும்) இருக்க வேண்டும் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொல்காப்பிய மற்றும் சங்க இலக்கிய வஞ்சிக்குச் சரியான தாவரப் பெயரை இன்னும் அறிய முடியவில்லை என்றே கூறவேண்டும். வஞ்சி என்ற ஒரே பெயர் இலக்கியத்தில் ஒரு கொடிக்கும் மரத்திற்கும் சுட்டப்பட்டிருக்க வேண்டும். .புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வஞ்சி மரம் தற்பொழுது பூவரசு என்று கூறப்படும் Thespesia வின் சிற்றினமாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், பக். 93-94).

நீர்த்துறையின் முன்னே, உயர்ந்து வளர்ந்துள்ள வெண்ணிற மருதமரத்துடன், வஞ்சி மரத்தையும் காவிரியின் நீர்ப்பெருக்கு அடியோடு சாய்த்ததை அகப்பாடல் ஒன்று (226 : 9-10) சுட்டுகிறது. வஞ்சி மரங்கள் உயர்ந்து வளர்வதற்கு இடமான ஊர் என்பதை, ‘வஞ்சி ஓங்கியயாணர் ஊர’ என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் வரியும் (50 : 2), வஞ்சி மரத்தின் கிளையில் நாரை கண் உறங்குவதை, ‘வஞ்சிக்கோட்டு உறங்கு நாரை’ என்ற புறப்பாடல் வரியும் (384 : 2) காட்டுகின்றன.

  1. பித்திகம்
பித்திகம்

பித்திகம் பித்திகை என்றும், பிச்சிப் பூ என்றும் செம்முல்லை என்றும் அறியப்படுகிறது. மாலையில் மலரும் இந்தப் பூவின் முதுகுப் பகுதி சிவப்பாக இருக்கும்.

மேகமூட்டத்தாலும், தொடர் மழையாலும் பொழுதினை அறியாத நிலையில், பித்திகப் பூ மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு விளக்கேற்றும் நேரம் வந்துவிட்டது எனப் பண்டைக் காலத்தில் பொழுதினை அறிந்தனர் (நெடுநல்வாடை, வரிகள் 40-41).

நறுமணம் கமழும் சந்தனத்தை அரைத்துப் பூசிய மார்பில் குளுமையான பித்திகைப் பூ மாலையையும் ஆண்மகன் அணிவது அக்கால வழக்கம். உழத்தியர் குருக்கத்திப் பூவையும், பித்திகைப் பூவையும் கலந்து கட்டி அகன்ற வாயுள்ள பனையோலைப் பெட்டியில் (கடகப்பெட்டி)  வைத்துக் கொண்டு தெருவில் கூவி விற்பனை செய்வர் (நற்றிணை, 97 : 6-9 மற்றும் 314 : 3-4; குறுந்தொகை, 168 : 1-2).

source : tamizhtharakai.wordpress.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *