சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’

சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு.

இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர் பண்பாட்டின் முதன்மை அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ‘மிருக ஆதரவாளர்கள்’.

மலைபடுகடாம்:

இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழை
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை

(மலை.330-335)

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்

(கலித்தொகை-102 : 9-10)

கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

(கலித்தொகை- 103 : 63-64)

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை:

காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க் கோதை யாள்”

“நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்”

இப்படி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் ஏறுதழுவலையும் தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்ததையும் விவரிக்கிறது.

இந்த பாடல்களில் காளைகளின் நிறம், வகை, வீரம், வேடிக்கைப் பார்க்கும் பெண்களின் கிண்டல்கள், பெண்கள், பெற்றோரின் மன இயல்பு ஆகியவற்றைதான் இந்த சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன.

முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை தமிழக பெண்களும் குரவைக்கூத்து என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பாடியுள்ளனர். ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டுக்கு முன்னர் குரவைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் தாங்கள் விரும்பும் ஆண்கள் சல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதலில் வெல்ல வேண்டும் என்பது முதன்மை விருப்பமாகவும் இருந்தது.

அது சரி ஜல்லிக்கட்டு என்பது தமிழ்ச் சொல்லா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது ஜல்லிக்கட்டு அல்ல… சல்லி கட்டு என்பதுதான் சரியானது.

அதாவது சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையமாகும். புளியங் குச்சியால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவதுதான் இந்த சல்லி வளையம். இந்த சல்லி வளையத்தைப் பிடித்து மாட்டிக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை கைப்பற்றுவதுதான் சல்லிக்கட்டு என்பதாகும். இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டாகிவிட்டது.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழர் வாழ்வின் அங்கமாக இருந்து வரும் ஏறுதழுவுதல் இனி ‘காட்சிப் பொருளாகுமோ’ என்ற அச்சத்தை ‘மிருக’ ஆர்வலர்கள் உருவாக்கி வருகின்றனர்!

source : tamil.oneindia.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *