சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன்ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத் தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக்கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினிவரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வடபோர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்துமாக் கடலும் 74,101 சதுரமைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன
தமிழர்குடியேறிய வரலாறு சங்ககால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ,மொலுக்காஸ் போன்ற தீவுப்பகுதிகள் முந்நீர்ப்பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் ஜாவாவைச் சாவகம், சாவகத்தீபம், யவத்தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்துவந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ்வணிகர்களும், தமிழ்ப்பெருமக்களும் சங்ககாலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம். பொதுவாக அந்தமான், நிக்கோபார்தீவுகள் வழியாக இந்தோனேசியாத்தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள். சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவகநாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை (14:73-85) கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய தருமசாவகன் என்ற பௌத்தத்துறவியை வணங்கியதாகவும், சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரிபூம்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சிநகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சிநகர் விரைந்ததாகவும் மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச்சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். சாவகத்தின் முத ல்மன்னனுக்கு மாறன் என்று பெயர். இந்தப்பெயர் சாவகத்தின் அரசப்பரம்பரையானது தமிழர்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையதென்பதை நன்கு விளக்குவதாக இருக்கின்றது. சாவகத்தில் இப்போதுள்ள பழங்குடி மக்களிடத்து, திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரான தமிழகப்படகர்களுக்குரிய பெயர்கள் வழங்கிவருகின்றன. ஜாவா, சுமத்திராநாடுகளில் இந்தியக் குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழிவந்தவர்களாக இருக்கவேண்டுமென்பதை ஜெ.குரோம் 1938) என்ற வெளிநாட்டறிஞர் காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார். மேற்கு ஜாவாவில் கிடைத்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு ஜாவாவின் தலைநகரமான ஜகார்த்தாவின் அருகிலுள்ள தரும நகரத்தை ஆண்ட பூரணவர்மன் என்ற இந்து அரசனைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. ஜாவாவில் சங்கல் என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவ கிரந்த எழுத்தின் பிற்கால வடிவில் எழுதப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு தென்னிந்தியாவில் குஞ்சர குஞ்சம் என்னும் இடத்திலிருந்து வந்து, குடியேறிய அரசனின் மரபிலே வந்த ஓர் அரசன் ஜாவாவின் நடுப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவிய செய்தியைச் சொல்கிறது. நாட்டில் குவாங்-வா-டி என்னும் மன்னன் ஆட்சி செலுத்திய காலத்தில் (ஏறத்தாழ கி.பி.75) சாவகத் தீவில் இந்துக்கள் குடியேற ஆரம்பித்தார்கள் என்று வில்லியம்ஸ்மித் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார்.
வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களை உடைய பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவராகக் கருதப்படுகின்றனர். பல்லவர்காலத்தில் (கி.பி. 550-750) கடல்மார்க்கம் வழியாக இந்தோனேசியாவிற்குப் பல தமிழ்பெருமக்கள் சென்றார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்தோனேசியாவில் கல்வெட்டுகள் கூட கிடைத்திருக்கின்றன. இராசசிம்மன் எனும் பல்லவ அரசன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியனாவான். அக்கோயிலின் வெளிப்புறமதிலுக்கு அடுத்துத் தெற்குப்பக்கத்தில் பல சிறுகோயில்கள் உள்ளன. அவற்றுள் இராசசிம்மனுடைய மனைவியருள் ரங்கபதாகை என்னும் அரசிதம் சொந்த செலவில் கட்டியுள்ளார். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. அதில் ரங்கபதாகையின் தந்தை பெயர் சைல அதிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டுகிறது என்று தி.நா.சுப்ரமணியம் அவர் எழுதிய (பக் 43) எனும் நூலில் தெளிவாக்குகிறார். சைலேந்திரருடைய ஆட்சியின் தொடக்க காலகட்டமே பல்லவரின் ஆட்சிகாலமாகும். சாவக அரசர்கள் மீனாங்கி தசைலேந்திரர் (மீனினை இலச்சினையாக உடையமலைகளின் தலைவர்) என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொண்டு இருந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டுகளால் அறிகின்றோம். பாண்டியருடைய கொடியில் எப்பொழுதும் இரட்டை கயல் மீன் பொறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த செய்தியாகும். சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தமையால், சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழி வந்தவராக இருக்கலாம் என கே.ஏ. நீலகண்டசாஸ்திரி கூறுகின்றார்.
சோழமன்னர்கள் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சாவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. லெய்டன்சாசனம் என்ற இராசஇராசசோழனின் சாசனத்தில் கடாரத்தின் அரசன் சூளாமணிவர்மனாலும் அவன் மகன் மாற விஜயேத்துங்கவர்மனாலும் தமிழத்திலுள்ள நாகப்பட்டிணத்தில் கட்டப்பெற்ற ஒரு பௌத்த விகாரம் கி.பி. 1006 ஆம்ஆண்டில் கட்டுவதற்குத் தொடங்கப்பட்டது. இதற்குஇராசஇராசன் ஆனைமங்கலம் என்னும் ஊரை நிவந்தமாக அளித்தான் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. இராசேந்திரசோழ அரசனின் மெய்கீர்த்தியைக் கூறும் சாசனம் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீவிசயப் பேரரசுக்கு எதிராக சோழர்கள் எடுத்தடற் படையெடுப்பைப் பற்றி கூறியிருக்கின்றது. தமிழர்கள் விருப்பம் போல் தென்கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்யத்தடை ஏற்பட்டதனால் 11 ஆம் நூற்றாண்டில் மாபெரும் சோழற்படை தென்கிழக்காசியாவில் பலநாடுகளிலும் புகுந்து வெற்றி வீரர்களாக ஆங்காங்குள்ள மன்னர்களோடு நட்புறவு கொண்டு தமிழர்கள் தங்குதடையின்றி வணிகம் புரியவும் குடியேறிவாழவும் வழிவகை செய்தனர். சோழ அரசர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பற்றி பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொதுமக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வுல்ட்ஸ் என்பாரும் சே.ஏ.நீலகண்டசாஸ்திரியும் கூறுகின்றனர். மேலும் தமிழ்வாணிகக்குடியிருப்புகள் இங்கு இருந்ததாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன. சுமத்திராவில் உள்ள லோபுதுவா எனும் இடத்தில் கிடைத்துள்ள தமிழ்க்கல்வெட்டில் 1500 பேர் அடங்கிய ஒரு வணிகக்கூட்டமைப்பு இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அயர்லிங்கா (கி.பி.1019-1049) எனும் சாவக அரசனின் குறிப்புகளிலும் திராவிட, கலிங்க, சிங்கள, கருநாடக நாட்டவர்கள் சாவகத்தில் வாணிகம் செய்ய வந்தனர் எனக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள கல்வெட்டுகளில் சுமத்திர பேரரசு ஸ்ரீவிசயாவைப் (கடாரம்) பற்றி செய்திகள் கிடைக்கின்றன. ஆகையால் பிற்கால சோழர்கள் காலத்தில் இந்தோனேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனத் தெரிகிறது. இத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்தோனேசிய அரசரான இராசசனாகர மன்னனின் அவைப்புலவரான பிரபன்சா எழுதிய நகரகர்த்தகாமாவில் (கி.பி.1365) காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் சாவக மன்னனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பாராட்டி சொல்லப்பட்டிருக்கின்றது. ஜெயனகர மன்னன் (1309-28) அவனுடைய முடிசூட்டு விழாவின் போது சுந்தரபாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிக்கொண்டான். பாண்டிய இலச்சினையான மீனைத் தனது இலச்சினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். காஞ்சிபுரத்திலிருந்து வந்த புத்தபிக்குகள் 14 ஆம் நூற்றாண்டில் சாவகத்தை ஆட்சி செய்த ஹயாம்வுருக் எனும் அரசரைப் புகழ்ந்துரைக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளின் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை மலாக்கா கடற்கரையோரப் பகுதிகளில் விவரமான அறிக்கைகள், கணக்கு தமிழிலும் வைக்கப்பட்டன எனச் சான்றுகள் கிடைத்துள்ளன. இச்சமயத்தில் தமிழர்களைக் கெலின்ங் என அழைத்தனர்.
அண்மைக் காலத்தில் பாலியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்கள் பாலி ஓர் இந்துக்குடியேற்றநாடு என்பதை மெய்பித்துள்ளன. பாலியிலுள்ள பழைய கல்வெட்டுகளில் எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. இவற்றால் பாலித்தீவில் தனித்ததோர் இந்துக்குடி அமைக்கப்பட்டு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் போற்றி வளர்க்கப்பட்டதை அறிகிறோம். பாலியின் கிழக்குக் கரையோரத்தில் சங்கு-பெட்ராக்கு எனுமிடத்தில் ஒரு தமிழ்க்கல்வெட்டு கிடைத்திருக்கிறது. அங்குஎழுப்பப்பட்டசிவன்கோயிலையும், அதில் இடம்பெற்றுள்ள முகலிங்கத்தையும் அது குறிப்பிடுகிறது. பழங்காலத்திலேயே பாலிக்குத் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக அங்கு வாழ்ந்துவருகின்றனர். பாலித்தீவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மூத்ததலைமுறையினர் அன்றாடம் தமிழ்ப்பாடல்களான தாயுமானவர் பாடல்களைப் பாராயணம் செய்யும் பழக்கமுடையவர்களாக உள்ளதால், இவர்களும் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பாலிக்குக் குடியேறி வாழ்பவர்களாக உள்ளதை அறிய வருகிறோம். காலிமன்தானில் (போர்னியா) ஏழு சமஸ்கிருதமொழிக்கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. பண்டைக்காலத்து மகாகன் ஆற்றுக்கு அருகில் மௌராகமன் என்ற துறைமுகம் சிறப்புற்று விளங்கியது. அத்துறைமுகம் இருந்த இன்றைய குடேய் மாவட்டத்தில் தான் இவ்வேழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. குண்டுங்கன் என்ற அரசனின் மரபைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதல் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகள் தொடக்கத்தில் போர்னியோவை ஆண்டதாக அக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குண்டுங்கன் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய ஓர் இளவரசனாகவும், கவுண்டினியன் என்ற புராண மரபில் வரும் அரசனாகவும் கருதப்படுகிறான். குண்டுங்கன் என்ற சொல் தமிழ்ச்சொல்லாக இருக்கலாம் என்றும், பல்லவர் செப்பேடு ஒன்றில் ;குண்டுகூரன் என்ற பெயர் ஒன்று காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். குண்டுங்களின் மகன் அசுவவர்மன் என்பதும், அசுவவர்மனுடைய மகன் மூலவர்மன் என்பதும் அக்கல்வெட்டுகளால் தெரியவருகின்றன. மூலவர்மன் காலத்து குடைகல்வெட்டுகள் சமஸ்கிருதமொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால்,நெடுந்தொலைவிலுள்ள போர்னியா தீவில் இந்தியநாட்டு மொழி, சமயம், அரசியல், சமூக நிறுவனங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறியமுடிகிறது. தமிழ்மாதங்களின் பெயர்களும், தமிழ்நீட்டல் அளவைப் பெயர்களும் அந்நாட்டில் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை அவை எடுத்துரைக்கின்றன. மேற்கு போர்னியோவில் ஓவியவேலைபாடுள்ளஸ்தூபம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பக்கச்சுவர்களில் எட்டுகல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பிற்காலப் பல்லவகையெழுத்து முறைகளைப் பார்க்கலாம். செலிபிஸ்தீவு மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவோடு மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தது. இதில் தென்னிந்திய நாகரிகப்பண்பாட்டின் செல்வாக்கினைப் பேரளவில் இன்றும் நாம் காணுகின்றோம். இங்குக் கண்டெடுக்கப் பெற்ற புத்தர் சிலை குப்தர் காலத்திய கலைப்பாணியின் சாயலைக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் இங்குப் பண்டைக்காலத்து பூசைமணி ஒன்றும், கைத்தாளங்கள்இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இன்றும் தமிழகத்து வீடுகளில் இறைவழிபாட்டின் பொழுது பயன்படுத்தப்படும் பூசைமணியையும் கைத்தாளங்களையும் ஒத்துள்ளன. பல்லவர் ஆட்சி காலத்திலேயே தமிழர்கள் குடியேறிதற்குச் சான்றாக பல்லவர்காலச்சின்னங்கள் பல செலிபிஸல் கிடைத்துள்ளன. செலிபிஸ் தென்னிந்தியாவோடு நேர்முகமாகத் தொடர்பு கொண்டிருந்தமை தொல்பொருள் சின்னங்களால் உறுதிப்படுகின்றன.
அச்சின்னங்கள் பல்லவர்களின் எழுச்சிக்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களின் குடியேற்றங்களும் வாணிகத்தொடர்புகளும் உண்டாகியிருக்க வேண்டும் என்பதை அறிவிக்கின்றன நியன்ஹய்ஸ் என்ற டச்சுப் புகையிலைத் தோட்ட உரிமையாளர் முதன்முதலில் ஒப்பந்தகூலிகளாக இருபத்தைந்து தமிழர்களை 1873 இல் இறக்குமதி செய்தனர். பாக்குத்தோட்டங்களைச் சுத்தப்படுத்தவும் குடிநீர் கொண்டு வரவும் மாட்டுவண்டி ஓட்டவும் சாக்கடைகளையும் சாலைகளையும் அமைக்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 1875 இல் கூலித்தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. தமிழர்களுக்கென மேற்பார்வையாளர் ஒருவர் தோட்டங்கள்தோறும்நியமிக்கப்பட்டார். தோட்ட மேற்பார்வையாளர்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்காது கூலித்தமிழர்கள் ஓடினால் டச்சுக்காரர்கள் ஓடியவர்களைப் பிடித்து ஆறுமாதகாலச் சிறை தண்டனை விதித்தனர். சிறைசென்ற தமிழர்கள் அரசாங்கச்சாலைகளை அமைக்க பயன்படுத்தப்பட்டனர். ஒப்பந்தக் கூலிகளைப் பிணைத்த கூலிகள் சட்டத்திட்டத்தை 1936 இல் டச்சுத் தோட்ட உரிமையாளர்கள் முழுமையாக அகற்றியதால் தமிழர்கள் சுதந்திர மனிதர்களாயினர். ஒப்பந்த கூலிகளாக பணியேற்ற தமிழர்களைத் தவிரமற்ற சுதந்திரத் தமிழர்கள் வியாபாரம் நிமித்தமாகவும் நகர்புறவேலைகள் செய்யும் பொருட்டும் மேடான் நகரத்திற்கு வந்தனர். செட்டியார்கள், செட்டிகள், வேளாளர், முதலியார், பத்தர்கள் பலரும் மேடானில் குடியேறினர். புதுச்சேரியிலிருந்து டச்சு வர்த்தக நிறுவனங்களில் கணக்கர்களாகப் பணியாற்ற இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிள்ளை, முதலியார் எனக் குறிப்பிடப்படும் தமிழர்களும் மேடான் வந்தனர். பூசாரிகள், ஐயர்கள், முடித்திருத்துவோர், சலவைத் தொழிலாளிகள் முதலானோரும் தமிழகத்திலிருந்து மேடானில் குடியேறினர். இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் இந்தோனேசியாவில் வாழ்கின்றனர் தொடரும்.
தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப்போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதை மணிமேகலை (14:73-85) கூறுகிறது.
இப்படியாக , உலகெங்கும் செறிந்துவாழும் தமிழர்களில் இந்தோனேசிய தமிழர்கள் பற்றிய தொகுப்பு.
அயலக தமிழர்கள்
இந்தோனேசியா
தமிழர்வரலாறு