தாய்லாந்து நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழர் தொன்மம் பரவி உள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறிய பல தகவல்கள் பின்வருமாறு உலகம் முழுதும் தமிழர்கள் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வணிகம் செய்ததற்கான ஏராளமான அடையாளங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதியின் வழியே ஆமையின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பகுதிகளில் வணிகம் செய்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து வங்கதேசம், பர்மா மலேசியா கம்போடியா லாவோஸ் வியட்நாம் வழியாக தாய்லாந்தில் கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே வணிகம் செய்துள்ளனர். இதன் காரணமாகவே தாய்லாந்து, தமிழ்நாடு மக்கள் இடையிலான மொழி, மரபு, பண்பாடு, உறவு போன்றவை பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளன. அதாவது சயாம் என்று அழைக்கப்பட்ட தங்கம் வணிகத்தில் சிறந்து விளங்கியதால் தமிழர்கள் அதனை சொர்க்க பூமி என்று அழைத்தனர். தமிழ்நாட்டில் பசும்பொன் என்று அழைக்கப்பட்ட உலோகம் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அந்நாட்டின் சொல்லான தங்கம் என்று தமிழ்நாட்டுக்கு பழக்கப்பட்டது. தாய்லாந்தில் புழக்கத்தில் இருக்கும் தாய் (மிலீணீவி ) என்ற மொழி கெமர் மற்றும் பல்லவ கிரந்தம் மொழியை அடைப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது, இதில் பல்லவ கிரந்தம் என்பது தமிழ்நாட்டில் பல்லவர்களை குறிப்பிட்டு தமிழ் மொழியை குறிப்பது. இதில் சமசுகிருதம் கலப்பு மொழியாக உள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை சேர்ந்த 18 ம் நூற்றாண்டு காலகட்டத்தின் குருக்கள் வம்சாவளிகள் தாய்லாந்தில் வாமனமுனி என்ற பெயரில் அரசகுருக்களாக தொடர்ந்து உள்ளனர். அதனுடன் தமிழகத்தில் ராமேசுவரத்தை பூர்வீகமாக கொண்ட புரோகிதர்கள், தாய்லாந்தில் 25 தலைமுறைகளாக (ஒரு தலைமுறை என்பது 35 வருடங்கள் ) புரோகிதம் செய்து வருகின்றனர். தாய்லாந்தில் தமிழர் தொன்மம் ஏராளம் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்நாட்டின் தக்கோபா என்ற இடத்தில பெரும் பாதங்கள், பானை ஓடு, போன்றவை கிடைத்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய இத்தொன்மங்களில் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன. முக்கியமாக தாய்லாந்து , கம்போடியா இடையே உள்ள ப்ரம்மம், புரிராம் என்ற எல்லை கோடு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
தாய்லாந்து மக்கள் , தமிழர்கள் இடையில் அதிகப்படியான பழக்கவழக்கம் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் இருந்ததன் காரணமாக இசை நடனம் திருவிழா போன்றவை ஒரே மாதிரியாக உள்ளன. அதாவது தமிழ்நாட்டின் சங்க காலத்தில் உருவான பொம்மலாட்டம் தோல்பாவைக் கூத்து போன்றவை தாய்லாந்தில் குழு நடனமாக உள்ளது. அதுபோல் தமிழர்களின் பாரம்பரிய நடனமான சதிராட்டம், வீரக்கலையான சிலம்பம், மல்யுத்தம் போன்றவை தாய்லாந்தில் இன்றளவும் அந்நாட்டு மக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2 ம் நூற்றாண்டின் வாழ்ந்த மனுநீதி சோழன் காலத்தில் நடைமுறையில் இருந்த நீதிமணிமுறை இன்றளவும் தாய்லாந்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் உள்ளது. தாய்லாந்து நாட்டு அரசனை ராஜேந்திரசோழன் போரிட்டு வென்றதன் காரணமானே கங்கை கொண்ட விஜயன் என ராஜேந்திரசோழன் அழைக்கப்பட்டார். அதை விளக்கும் வகையில் ஓவியமும் தாய்லாந்தில் உள்ளது. தாய்லாந்தில் தென் திசையில் எமன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளதன் காரணமாகவே தமிழர்கள் தென்திசை வேந்தன் என எமதர்மனை அழைக்கின்றனர். தமிழர்கள் திருமண நாள் குறிக்கும் முறையை தாய்லாந்து மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தமிழர்கள் வணிகத்தின் போது ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் கடல் தெய்வமாக மணிமேகலையை வணங்குவர். அதுபோல், தாய்லாந்தில் மணிமேகலை பெயரை கடல்தாய் என அழைத்து வழிபடுகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் தாய்லாந்தில் ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. சிலோம் என்ற இடத்தில் 180 ஆண்டுகால மாரியம்மன் கோவில் உள்ளது. முக்கியமாக தாய்லாந்து மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் திருவெண்பாவை தமிழிலேயே படிக்கின்றனர். தாய்லாந்து நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பல சொற்கள் நேரடியாக தமிழ் சொற்களைக் கொண்டுள்ளன.
அதாவது, பட்டினம் என்பது பட்டோஎன்றும், வேலை என்பது வேலா என்றும், மாங்காய் என்பது மாங்கு என்றும் அழைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டின் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாரம்பரிய அடையாளங்களான சேவல் சண்டை , காளைச்சண்டை , புறாத்தூது போன்றவை தாய்லாந்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யுமிடம் உள்ளது. அதுபோல், தாய்லாந்தில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மண்ணை என்ற இடம் தமிழ்பெயரில் இன்றளவும் உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற தமிழர் அடையாளங்கள் தாய்லாந்தில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழர்கள் வணிகத்திற்கான கடல்பயணத்தை பல்வேறு குழுக்கள் மூலம் வகைப்படுத்தி கடல்பயணம் மேற்கொண்டனர். இதில், ஐந்து வண்ணங்கள் கொண்டவர்கள் மூலம் பயணம் மேற்கொள்ளும் ஐந்து வர்ணத்தார், 500 பேர்களை கொண்ட குழு ஐநூற்றுவர், 300 பேர்களை கொண்ட குழு முன்னூற்றுவர், கடலில் வணிகம் செய்து வலது பக்கம் வழியாக மீண்டும் திரும்பி அதே இடத்திற்கு வரும் வலஞ்சியர், 18 நாடுகளை சுற்றி வரும் பதினென்விசையறிந்தார் போன்ற சிறப்பு வாய்ந்த குழுக்கள் மூலம் தமிழர்கள் கடல் வணிகம் செய்தனர். தாய்லாந்தில் உள்ள மக்கள் தமிழர்களை பார்க்கும் போது பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் போன்று பேசுகிறீர்கள் என கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் பேசும் மொழி தமிழ் என்றும், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு மக்கள் அறிவதில்லை. ஏனெனில், தமிழர்கள் முதலில் பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்றதாலே அவர்கள் அவ்வாறு நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தமிழ்மொழி தமிழர்களுடையது என புரியவைக்க வேண்டும். தாய்லாந்தில் 93 விழுக்காடு மக்கள் தமிழ்பவுத்தம் வழிபாட்டை அடிப்படையாக கொண்டவர்கள்.தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்பொற்கொல்லரின் உரைகல் அதனால், தமிழ்நாட்டில் பவுத்த கோவிலை நிறுவி, தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள் தமிழகத்திற்கு வருகைபுரிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதனுடன், கடல்கடந்த தமிழ் வைணவம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தாய்லாந்தில் தமிழர் தொன்மம் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள சிலப்கோரன் பல்கலைக்கழகத்தில் தமிழ் உருவாக்கவேண்டும். அதனை தொடர்ந்து, தாய்லாந்தில் 5 ஆயிரம் தமிழர்களைக் கொண்டு இயங்கும் தாய்லாந்து தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் இயல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்றார். மேலும், தாய்லாந்தில் எண்ணற்ற தமிழர் தொன்மங்கள் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழரின் பெருமையை உலகறியச் செய்ய முடியும் என்றார்.
நன்றி : தின இதழ் )
தாய்லாந்துமக்கள் – தமிழர்கள் இடையிலான பழக்கவழக்கம் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததன் காரணமாக இசை, நடனம், திருவிழா போன்றவை ஒரேமாதிரியாக உள்ளன என்கிறார் தமிழ் ஆய்வாளர் ஒரிசாபாலு அவர்கள்.