1) அனைவரும் தொலைபேசியில் பேசுகிறீர்கள். வணக்கம், அய்யா வணக்கம், என்று உங்கள் பேச்சைத் தொடங்க முயற்சி செய்யுங்களேன். (ஹலோ வேண்டாம். எலேய், எல்லோ என்பது தான் ஹலோ என்றானது எனவே அலோ என்று சொல்லுவது தவறில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்)
2) கண்ணாடி முன் நின்று பேசுங்கள். உங்கள் முகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
ஒவ்வொரு ஒலிப்பின் பொழுதும் உங்கள் முகம் மாறுகிறதா அல்லது அப்படியே சிலைபோலவே இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் முகம் மலர்ந்து, அன்போடு நீங்கள் பேசத் தொடங்கினால் உங்களது அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். கோபம் கொண்டு வெறுக்கத் தக்க சொற்களைச் சொல்ல வேண்டாம். இது உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை அழித்துவிடும். இனிமையான சொற்களையே சொல்லுங்கள். சுட்டிக் காட்டியே ஆகவேண்டும் என்றநிலை இருந்தால், சுட்டுவதையும் அவர்கள் உணரும் வகையில் அன்போடு சுட்டிக் காட்டுங்கள். சுட்டிக்காட்டி எதிரியாகுகிற நிலையையே அனைவரும் அடைகின்றனர். (பகை நட்பாக் கொள்ளும் பண்பே போற்றி)
3) வலிந்து ஆங்கிலச் சொற்களைப் பேச வேண்டாம். (ஆங்கிலம் பேசுவதாக இருந்தால் தமிழ் கலக்காமல் ஆங்கிலமாகப் பேசுங்கள். தமிழில் பேசும் பொழுது தமிழாகப் பேசுங்கள். இப்பொழுது ஆங்கிலமும் பேசாமல், தமிழும் பேசாமல் – தமிங்கிலனாகப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை மொழிவிழியற்ற இழிவு என்று கருதாமல் பெருமை என்று நினைத்துப் பேசுகிறார்கள்.)
4) மெதுவாகப் பேசவும். ஒவ்வொரு சொல்லாக பேசவும். உங்கள் மூளை அந்தச் சொல் தமிழ்ச் சொல்தானா என்று பார்த்துக் கொண்டே இருக்கட்டும். முதலில் பேசுவது கடினமாகத்தான் இருக்கும். நான் சில மாதங்கள் யாரிடமும் பேசவே இல்லை. படிப்படியாக என்னை வளர்த்துக் கொண்டு பேசத் தொடங்கினேன். இபபொழுது பேசுவதைக் கேட்டு வணங்குகின்றனர். நம்மால் இயலும். நம்மால் பேச இயலும். நான் பேசுவேன். என்ற உறுதியும், தொடர்ச்சியும் வேண்டும். அடுத்தவர்கள் பேசும் பொழுது
அதில் உள்ள அயற்சொற்கள் எவை என்று கண்டுபிடியுங்கள். அவற்றைக் குறித்து வைத்து
அதற்கான சரியான தமிழ்ச் சொற்கள் எவை என்று அறிந்து கொள்ளுங்கள். அந்தச் சரியான சொற்களை நீங்கள் உங்கள் பேச்சில் கையாளுங்கள.
5) தொடக்கநிலைச் சூரத்தனம் என்று ஒன்று உண்டு. தொடக்கத்தில் அனைத்தையும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுவோம். விரைவில் அவை அனைத்தையும் கீழே போட்டுவிட்டு பழைய படியே, பழைய நிலையிலேயே தொடருவோம். இது வேண்டாம். தொடக்கத்தில் தமிழ் பேசுகிறேன் என்று கரடு முரடாகத் தமிழ் பேசி அடுத்தவரிடம் குட்டு வாங்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் பேசுவதைக் கேட்டு அடுத்தவர் மகிழ வேண்டும். அந்தச் சொற்கள் இனிமையானதாக, சரியான தமிழ்ச் சொற்களாக, வணங்குதற்குரியதாக, கேட்பவரைச் சிந்திக்க வைத்து, அவரையும் இயங்க வைப்பதாக அமைய வேண்டும். தமிழ்தான் இதைச் செய்யும். தமிழால் தான் இதைச் செய்ய இயலும். தொடக்கத்தில் எளிமையான, நல்ல சொற்களை வரிசைப் படுத்திப் பேசத் தொடங்குங்கள்.
பேசுவதும் ஒரு வேள்விதான். உங்களால் வெற்றி பெற முடியும். தொடங்குங்கள்.